காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் சண்டையிட்ட காட்டுப்பன்றிகள்சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் சண்டையிட்ட காட்டுப்பன்றிகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டுப்பன்றிகள் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த காட்டுப்பன்றிகள் சோதனைச்சாவடி பகுதியில் உலா வந்தன. இந்த நிலையில் அந்த காட்டுப்பன்றிகள் திடீரென ஒன்றுக்கொன்று கால்களை தூக்கி ஆக்ரோஷமாக சண்டையிட்டன. இந்த சண்டை காரணமாக சோதனைச்சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போன் மூலம் வீடியோ மற்றும் படம் எடுத்தனர். காட்டுப்பன்றிகளின் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.