கழுகுமலை அருகே பாலம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

கழுகுமலை அருகே பாலம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-18 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே ராமநாதபுரம் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், இதை விரைவுபடுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் அந்த பகுதி சர்வீஸ் சாலையில் மண் சரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

பாலம் கட்டும் பணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கயத்தாறு யூனியனுக்கு உட்பட்ட ராமநாதபுரம்-கழுகுமலை சாலையில் உள்ள பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக பாலத்தின் வலது புறத்தில் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு மண் சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாகத்தான் கழுகுமலையில் இருந்து சிவகாசி, கோவில்பட்டிக்கும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் சிவகாசிக்கு செல்லும் பட்டாசு ஆலை பணியாளர்கள் வாகனமும் அதிகளவில் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.

மண் சரிவு

தற்போது கழுகுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலம் கட்டும் பகுதியில் தண்ணீர் அதிகமாக தேங்கி கிடக்கிறது. மேலும் சர்வீஸ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு வசதியற்ற சாலையாக மாறிவிட்டது.

இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டி வழியாக செல்லும் அரசு பஸ்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. எனவே, இந்த வழியாக அரசு பஸ்கள் மூலம் வந்து கழுகுமலை பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் இந்த சர்வீஸ் சாலை வழியாக தினமும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ் போன்ற வாகனங்கள் நடுப்பட்டி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு செல்கின்றன.

மந்தமான பணி

இதுகுறித்து கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் சாலையில் உள்ள பாலம் கட்டும் பணி சுமார் 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது. மந்தமாக நடைபெற்று வந்த இந்த பணி முழு வேகத்தில் நடக்கவில்லை. மழை காலத்திற்கு முன்னதாகவே கட்டி முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சர்வீஸ் சாலையிலும் செல்ல முடியாமல் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டது. ராமநாதபுரம், லட்சுமிபுரம், கொளக்கட்டாகுறிச்சி, நடுவப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் வராததால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

விரைவுபடுத்த வேண்டும்

எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பாலம் கட்டும் பணிகளை வேகமாக செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வீஸ் சாலை அருகே உள்ள பள்ளத்தில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆமை வேகத்தில்...

லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருமலைசாமி கூறுகையில்:-

ராமநாதபுரம் சாலையில் உள்ள பாலம் கட்டும் பணியை மழைக்காலத்திற்கு பின்னர் தொடங்கி இருக்க வேண்டும். தற்போது மழைக்காலத்திற்கு முன் தொடங்கப்பட்டதால் பாலம் வேலை நடைபெறும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

சர்வீஸ் சாலையும் மழையால் சேதம் அடைந்து மோசமாக உள்ளதால் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் சர்வீஸ் சாலை அருகே சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைத்து பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்