கோபி அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பெண்கள் கைது

கோபி அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்ததுடன், தொழில் அதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-31 21:31 GMT

கடத்தூர்

கோபி அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்ததுடன், தொழில் அதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழில் அதிபர்

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). ஆயத்த ஆடை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தாய் மரகதமணி விருப்பப்பட்டு உள்ளார். இதற்காக அவர் மொடச்சூரை சேர்ந்த சந்திரா (53), பவானியை சேர்ந்த அமுதா (53), வெள்ளாங்கோவிலை சேர்ந்த கலைவாணி (40) ஆகிய 3 பெண் தரகர்கள் மூலம் கார்த்திகேயனுக்கு பெண் பார்த்து உள்ளார்.

திருமணம்

இந்த நிலையில் 3 பெண் தரகர்களும், விருதுநகர் பகுதியை சேர்ந்த அழகு என்ற பெண் தரகரை தொடர்பு கொண்டனர். அப்போது விருதுநகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கார்த்திகேயனுக்கும், அந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 4-ந் தேதி திருமணம் நடந்து உள்ளது.

இதனிடையே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து ஈரோடு சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கைது

தகவல் அறிந்ததும் சைல்டு லைன் ஆலோசகர் மணிமேகலை இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 15 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக பெண் தரகர்களான சந்திரா, அமுதா, கலைவாணி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடையதாக சிறுமியை திருமணம் செய்த கார்த்திகேயன், அவருடைய தாயார், விருதுநகரை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பெண் தரகர் அழகு ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்