கயத்தாறு அருகே விவசாயிகள் தர்ணா போராட்டம்

கயத்தாறு அருகே விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-12 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

உயர்மின்அழுத்த கோபுரம்

கோவில்பட்டி அருகே கயத்தாறு தாலுகா சிவஞானபுரம் பஞ்சாயத்து பகுதியில் குமரகிரி கிராமத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் நீர்வழிப்பாதையில் தனியார் நிறுவனத்தின் சார்பில், உயர்அழுத்தமின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கயத்தாறு போலீஸ் நிலையத்திலும், தாலுகா அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர். ஆனால் இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள் தர்ணா

இதனால், தங்களது விவசாய நிலங்களில் அனுமதியின்றி உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இதுகுறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து உயர்மின்அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் நேற்று நிறுத்தி வைத்துள்ளது. இந்த பணியை முற்றிலுமாக நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்