ஈரோடு வில்லரசம்பட்டி அருகே புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு வில்லரசம்பட்டி அருகே புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

Update: 2023-05-13 20:51 GMT

ஈரோடு வில்லரசம்பட்டி அருகே புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர் பூங்கா

ஈரோடு வில்லரசம்பட்டி அருகே உள்ளது கருவில்பாறைவலசு. இந்த பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் அதன் அருகே குளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் அங்கு சென்று ஊஞ்சல், சறுக்குகளில் விளையாடி பொழுதை போக்கி வந்தனர். மேலும் குளத்தில் குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று மகிழ்ந்து வந்தனர். இது அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு தளமாக இருந்தது.

இந்தநிலையில் கொரோனா பரவல் காலத்தில் சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி செல்ல தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்கா புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அங்கு விஷஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சிறுவர் பூங்காவை சீரமைப்பதுடன், படகு சவாரிவை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பாம்புகளின் கூடாரம்

வில்லரசம்பட்டியை சேர்ந்த சரவணன்:-

கருவில்பாறை வலசு, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்குள்ள சிறுவர் பூங்காவில் தங்களுடைய குழந்தைகளுடன் காலை, மாலை பொழுதை போக்கி வந்தனர். இங்கு சிறுவர்கள் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றில் விளையாடி மகிழ்ந்து வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சிறுவர் பூங்கா மூடப்பட்டது. அன்று மூடப்பட்ட பூங்கா இன்றுவரை திறக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் புதர் மண்டியும், பாம்புகளின் கூடாரமாகவும் பூங்கா திகழ்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு தனியார் கல்லூரியில் இருந்து நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து வந்தது. இதனை கண்ட மாணவர்கள் அலறிஅடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சுத்தம் செய்யும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே பல ஆண்டுகளாகவே புதர் மண்டி கிடக்கும் பூங்காவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து தரவேண்டும்.

நடைபயிற்சி

ஒண்டிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்:-

சிறுவர் பூங்கா திறந்த ஆரம்ப காலத்தில் குடும்பத்துடன் இங்கு குழந்தைகளுடன் வருவோம். இதனால் எங்களுக்கு மகிழ்ச்்சியாக இருந்தது. தற்போது பூங்கா மூடப்பட்டு கிடப்பதால் மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் அதன் அருகே உள்ள குளத்தின் கரையோரத்தில் காலை, மாலை நடைபயிற்சி செய்து வந்தோம். தற்போது குளம் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. படகு சவாரியும் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது பள்ளிக்கூடங்களில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் குழந்தைகள் பூங்காவுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே பூங்காவை திறக்கவும், ஆகாய தாமரைகளை அகற்றி படகு சவாரி தொடங்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோதிகள்

வில்லரசம்பட்டியை சேர்ந்த முத்துசாமி:-

பூங்கா திறந்தபோது ஒண்டிக்காரன்பாளைம், எல்லப்பாளையம், குமலன்குட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கருவில்பாறை வலசு பூங்காவுக்கு ஆட்டோவில் வருவார்கள். இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கு வருமானம் கிடைத்தது. தற்போது அதுவும் கிடைப்பது இல்லை. பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர் பூங்கா மூடப்பட்டே கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்குள் அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். குளத்தில் படகு சவாரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூங்காவில் பழுதடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்