கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

Update: 2022-10-10 16:30 GMT

முல்லைப்பெரியாறு

கூடலூர் சுல்லக்கரை ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (33). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். கடந்த 6-ந்தேதி இவர்கள் இருவரும் கூடலூர் காஞ்சிமரத்துறை பாலம் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றில் இறங்கி இருவரும் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக சிவா ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் முல்லைப்பெரியாற்றில் இறங்கி சிவாவை தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து 4 நாட்களாக தேடியும் சிவா கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இதனால் ஆற்றில் தண்ணீரை நிறுத்தி சிவாவை மீட்டுத் தரகோரி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காஞ்சிமரத்துறை அருகே முல்லைப்பெரியாற்றில் கட்டப்பட்ட சிறு புனல் நீர்மின் நிலையத்தின் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். அப்போது காஞ்சிமரத்துறை பாலம் அருகே சிவாவின் உடல் தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது.

உடனடியாக தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 5 நாட்கள் தேடுதலுக்கு பின் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்