கடலூர் அருகே கார் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கடலூர் அருகே கார் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் உயிாிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

Update: 2022-09-22 18:45 GMT

சிதம்பரம், 

கடலூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற கார் ஒன்று, நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் பெரியப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த இருதயநாதன் மனைவி கலிசாமேரி (வயது 60), ஊ.மங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகள் தேவதர்ஷினி (20) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பெரியப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின் மனைவி பிரியா (30), இவருடைய மகன் ஜெரூன்ஜாய்(2), குறிஞ்சிப்பாடி புலியூரை சேர்ந்த தமிழ்செல்வன்(22) ஆகியோர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் பிரியா மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்செல்வன், ஜெரூன்ஜாய் ஆகியோர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்