கூடலூர் அருகேவனப்பகுதியில் இறந்து கிடந்த மூதாட்டி

கூடலூர் அருகே வனப்பகுதியில் மூதாட்டி இறந்து கிடந்தார்.

Update: 2023-01-07 18:45 GMT

கூடலூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் வண்ணாத்திப்பாறை, எள்கரடு வனப்பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது வண்ணாத்திப்பாறை காப்புக்காடு வனப்பகுதிக்குள் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது அருகில் சென்று பார்த்தபோது பிளாஸ்டிக் பை மற்றும் குடிநீர் பாட்டில்கள் கிடந்தன.

இதுகுறித்து வனத்துறையினர் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த முதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தடைசெய்யப்பட்டுள்ள வனப்பகுதிக்குள் எப்படி சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்