சின்னமனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்:ஊராட்சி அலுவலகத்தி்ற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு
சின்னமனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வராததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம்
சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தட்டுப்பாடு காரணமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அங்குள்ள சின்னமனூர்-சாலையில் நேற்று திரண்டனர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வழக்கம்போல் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.