சென்னிமலை அருகே தார் கலவை தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சென்னிமலை அருகே தார் கலவை தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-10-22 00:02 GMT

சென்னிமலை அருகே தார் கலவை தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிற்சாலையை முற்றுகை

சென்னிமலை அருகே வாய்ப்பாடி ஊராட்சிக்குட்பட்ட தோப்பு கருப்பணசாமி கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை செய்வதற்கான தொழிற்சாலை சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இங்கு நேற்று முதல் தார் கலவை செய்வதற்கான பணிகள் தொடங்க இருந்தது. இது குறித்து அறிந்ததும் வாய்ப்பாடி ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஜெகதீஸ்வரி, சண்முகம் உள்பட ஏராளமானோர் தொழிற்சாலை முன்பு திரண்டனர். பின்னர் பொதுமக்கள் பலர் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.

எதிர்ப்பு

அப்போது அங்கு பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அவர்களிடம் பொதுமக்கள் கூறும்போது, 'இந்த தொழிற்சாலையில் தார் கலவை செய்தால் அதற்கான மூல பொருட்களை சூடாக்கி உற்பத்தி செய்யும் போது அங்கிருந்து புகை வெளியேறினால் சுற்றுச்சூழல் பாதிக்கும். இதனால் இங்கு தார் கலவை தொழிற்சாலை செயல்பட நாங்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்' என்றனர்.

போலீசார் எச்சரிக்கை

இதைத்தொடர்ந்து போலீசார் கூறும்போது, 'தார் கலவை தொழிற்சாலை இயங்குவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கோர்ட்டு உத்தரவு உள்ளது. அதனால் நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். யாராவது தொழிற்சாலைக்குள் நுழைந்தால் கைது செய்வோம்' என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே இதுகுறித்து அறிந்ததும் பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அவரிடம் போலீசார் கூறும்போது, 'தார் கலவை தொழிற்சாலை இயங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொழிற்சாலை தரப்பில் கோர்ட்டு உத்தரவு பெற்றுள்ளனர். அதன்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

கோர்ட்டு உத்தரவு

இதையடுத்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோர்ட்டு உத்தரவை பொதுமக்களிடம் காண்பிக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டார். உடனே தொழிற்சாலை நிர்வாகம் கோர்ட்டு உத்தரவு நகலை பொதுமக்களிடம் கொடுத்தனர். ஆனால் அந்த உத்தரவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் தார் சாலை அமைப்பதற்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இருந்துள்ளது. ஆனால் தார் கலவை தொழிற்சாலை இயங்க போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் தவறாக கூறியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொழிற்சாலையில் தார் கலவை செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோர்ட்டு உத்தரவை சரியாக படித்து பார்க்காமல் நேற்று அதிகாலை முதல் ஏராளமான போலீசாரும் தொழிற்சாலைக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக அங்கு வாகனங்களும் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்