சென்னிமலை அருகே 2 லாரிகள் மோதி விபத்து; மேலும் ஒரு லாரி கவிழ்ந்தது டிரைவர்கள் உயிர் தப்பினர்
2 லாரிகள் மோதி விபத்து
சென்னிமலை அருகே 2 லாரிகள் மோதிக்கொண்டன. மேலும் ஒரு லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் உயிர் தப்பினர்.
2 லாரிகள் மோதல்
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. நொய்யல் என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை பாரம் ஏற்றி சென்ற லாரியின் வலதுபுற பக்கவாட்டில் மோதியது. இதனால் அந்த லாரியின் பக்கவாட்டு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மோதிய வேகத்தில் மூடைகளில் இருந்து தவிடு துகள்கள் ரோட்டில் சிதறிக்கிடந்தது.
லாரி கவிழ்ந்தது
இதற்கிடையில் மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னிமலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னிமலையை அடுத்த நொய்யல் பகுதியில் சென்றபோது ஏற்கனவே விபத்தில் சிக்கிய லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் வலது புறமாக திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோடு போடுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் சக்கரம் சிக்கி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்துகளால் டிரைவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எச்சரிக்கை தடுப்புகள் இல்லை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள்.
இதுகுறித்து நொய்யல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'நொய்யலில் உள்ள வளைவில் ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் கவிழ்ந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒப்பந்ததாரர் சாலையோரத்தில் குழி தோண்டி அதனை சரியாக மூடவில்லை. மேலும் இது குறித்த எச்சரிக்கை தடுப்புகளும் வைக்கவில்லை. இதனால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளது' என்றனர்