போடி அருகேதச்சு தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை :மீன் வியாபாரி கைது; பரபரப்பு வாக்குமூலம்

போடி அருகே தச்சு தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-29 18:45 GMT

தொழிலாளி

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). தச்சு தொழிலாளி. போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). மீன் வியாபாரி. இவர்கள் இருவரும் நண்பர்கள். இதனால் கருப்பசாமி அடிக்கடி ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது ஜெயபிரகாஷ் மனைவிக்கும் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைக்கண்ட ஜெயபிரகாஷ் மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தார். ஆனால் கருப்பசாமி அதை கேட்காமல் மீண்டும் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் ஜெயபிரகாஷ் அங்கிருந்து தனது குடும்பத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடி பரமசிவன் கோவில் தெருவில் குடியேறினார்.

வெட்டிக்கொலை

ஆனால் மீண்டும் கருப்பசாமி அவரது மனைவியுடம் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசிங்காபுரம் அருகே பொட்டிபுரம் சாலையில் ஒழுகால் பாதை அருகே ஜெயபிரகாஷ் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் கருப்பசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அங்கு வரவழைத்தார்.

இதையடுத்து அங்கு கருப்பசாமி வந்தார். பின்னர் 2 பேரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து மீனை வெட்டுவதுபோல் கருப்பசாமியின் உடலில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வௌ்ளத்தில் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சாய்ந்தார்.

மீன் வியாபாரி கைது

பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வௌ்ளத்தில் கிடந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ஜெயபிரகாஷ் மீன் வெட்டும் கத்தியுடன் போடி தாலுகா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெயபிரகாஷ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், கருப்பசாமியும், நானும் நெருங்கிய நண்பர்கள். இதனால் அவர் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது எனது மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தனது மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்காததால் அவரை வெட்டி கொலை செய்தேன் என்று கூறியிருந்தார். மனைவியுடன் பழகியதை கண்டித்தும் கேட்காததால் தச்சு தொழிலளியை, மீன் வியாபாரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்