பவானி அருகேகுடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

பவானி அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-08-07 21:26 GMT

பவானி அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

பவானி அருகே உள்ள வரதநல்லூர் ஊராட்சிக்குட்பட்டது கூலிக்காரன்பாளையம், பொரட்டுக்காட்டூர் கிராமம். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் ஏற்றப்பட்டு் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி ஆற்று தண்ணீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள கூலிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மாரிமுத்து மற்றும் வரதநல்லூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பூர்த்தி செய்யவில்லை

அப்போது பெண்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஈரோடு மாநகராட்சி மக்களின் தேவைக்காக குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை. உடனே கூலிக்காரன்பாளையம், பொரட்டுக்காட்டூர் கிராம பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.

அதற்கு அதிகாரிகள், 'மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வழங்க முடியவில்லை. விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்