பவானி அருகேகுறிச்சி மலையில் மண் அள்ளுவதை தடுக்கவேண்டும்பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
பவானி அருகே குறிச்சி மலையில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பவானி அருகே குறிச்சி மலையில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறிச்சி மலை
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
பவானி தாலுகா குறிச்சி மலையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். இதுதொடர்பாக பவானி தாசில்தாரிடம் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டது. அவர் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நிலத்தை ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்கும் வரை அந்த பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுப்பதாக கூறி கனரக வாகனங்கள் மூலமாக குறிச்சி மலைப்பகுதியில் இருந்த மண் எடுக்கப்படுகிறது. எனவே குறிச்சி மலையில் இருந்து மண் அள்ளுவதை தடுக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பி.கே.பழனிசாமி தலைமையில் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கருப்பு துணி
விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நம்பியூர் அருகே வரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க வந்தனா். அந்த மனுவில், "கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசித்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி தனி குடும்பங்களாக வசித்து வருகிறோம். இதனால் இடவசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது. சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.சி.நடராஜ் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
கோபிசெட்டிபாளையம் தாலுகாவுக்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சியில் குண்டேரிபள்ளம் அணை அருகே விளாங்கோம்பை மலைக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து 18 மாணவ-மாணவிகள் உள்ளனர். அவர்கள் கொங்கர்பாளையம் அரசு பள்ளிக்கூடத்துக்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
குடிநீர் வசதி
அந்தியூர் அருகே கீழ்வானி காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசின் சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்து உள்ளதால், சீரமைத்து கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள சமுதாயக்கூடமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதையும் சீரமைத்து தரவேண்டும். இடமில்லாதவர்களுக்கு விலையில்லா வீட்டுமனை கொடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.
தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்ற தலைவர் சி.முத்துசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பெருந்துறை தாலுகா தென்முகம் வெள்ளோடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராசா சாமி நல்லமங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு புதிய கோவில் கட்டுவதற்கு குலதெய்வமாக கொண்ட பக்தர்களிடம் நன்கொடை பெறப்பட்டது. புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய ராசா சாமி கோவில், புதிதாக கட்டிய கோவிலுக்கு அருகில் உள்ளது. எனவே நாங்கள் புதிதாக கட்டிய கோவிலுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டிய கோவிலில் உண்டியல் வைக்க முயற்சி செய்தனர். உண்டியல் வைப்பது தொடர்பாக இதுவரை எந்தஒரு அறிவிப்பும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. எனவே புதிய கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 312 மனுக்களை கொடுத்தனர். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.