பவானிசாகர் அருகே நாயை கொன்று மரத்தில் பாதி உடலை விட்டு சென்ற சிறுத்தை; விவசாயிகள் பீதி

பவானிசாகர் அருகே நாயை கொன்று மரத்தில் பாதி உடலை சிறுத்தை விட்டு சென்றது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2022-08-25 21:32 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அருகே நாயை கொன்று மரத்தில் பாதி உடலை சிறுத்தை விட்டு சென்றது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இங்கிருந்து இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் கிராமப் பகுதிகளில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. காவலுக்காக விடப்பட்ட நாய்களையும் கொன்று வருவது தொடர் கதையாக உள்ளது.

பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது46). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 3 பசு மாடுகள், 20 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது தோட்டத்தில் கால்நடைகளை கட்டி வைத்துவிட்டு சிவகுமார் வீட்டுக்கு சென்று விட்டார்.

மரத்தில் நாய் உடல்

இந்த நிலையில் நேற்று காலை சிவகுமார் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காவலுக்காக விடப்பட்டிருந்த நாயை காணவில்லை. இதனால் அவர் நாயை தேடி பார்த்தார். அப்போது அப்பகுதியில் உள்ள புங்க மரத்தின் கிளையில் நாயின் பாதி உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் பதிவானது சிறுத்தையின் கால்தடம் என்பது உறுதியானது.

சிறுத்தை கொன்றது

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சிவகுமாரின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு நின்றிருந்த காவல் நாயை கடித்து கொன்றுள்ளது. அதன்பின்னர் நாயின் உடலை தூக்கி சென்று மரத்தின் மீது வைத்து பாதி உடலை தின்றுவிட்டு மீதி உடலை மரத்திலேயே விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

இதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவகுமாரின் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்