ஆசனூர் அருகே கரும்புகளை தேடி வாகனங்களை வழிமறித்து யானைகள் அட்டகாசம்: வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு

ஆசனூர் அருகே கரும்புகளை தேடி வாகனங்களை வழிமறித்து யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2023-06-23 21:45 GMT

ஆசனூர் அருகே கரும்புகளை தேடி வாகனங்களை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள், லாரியின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தின. மேலும் வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழுதாகி நின்ற லாரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அங்குள்ள திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன.

அவ்வாறு கடந்து செல்லும் யானைகள் அந்த வழியாக செல்லும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை மறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்கின்றன.

துதிக்கையால்...

இந்த நிலையில் ஆசனூர் அருகே திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றது. நேற்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பழுதாகி நின்ற லாரியின் அருகில் வந்து நின்றது. பின்னர் அந்த லாரியில் கரும்பு உள்ளதா? என துதிக்கையால் தேடியபடி சுற்றி சுற்றி வந்தது. யானையை கண்டதும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

ஆனால் லாரியில் கரும்பு இல்லை என்பதை அறிந்து கொண்ட யானை, பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஏமாற்றத்துடன் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கியது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அலறியடித்து ஓட்டம்

இதேபோல் கரும்புகளை சுவைப்பதற்காக ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை ஆசனூர் அருகே ரோட்டில் சுற்றித்திரிந்தன. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து கரும்புகள் இருக்கிறதா? என தேடி பார்த்தன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். பஸ்கள், கார்கள், லாரிகள் என அனைத்தும் ரோட்டின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த ஒரு யானை வனத்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்த தொடங்கியது. இதனால் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

லாரி கண்ணாடி சேதம்

அதைத்தொடர்ந்து அங்கு நின்றிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடியை ஒரு யானை தனது துதிக்கையால் உடைத்தது. இதில் கண்ணாடி சேதமானது. அதன்பின்னர் சிறிது நேரம் ரோட்டில் யானைகள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தன. பின்னர் யானைகள் தானாகவே ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். யானைகளின் தொடர் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைத்தனர். அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்