ஆசனூர் அருகே சேற்றில் சிக்கிய யானையை மீட்ட மற்றொரு யானைசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வீடியோ வைரல்

Update: 2023-04-18 21:22 GMT

ஆசனூர் அருகே ஓடை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை மீட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வறட்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது ஆசனூர் வனச்சரகம். தற்போது கோடை காலம் என்பதால் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் செடி, கொடிகள் கருகிவிட்டன. மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. குளம், குட்டைகளும் வறண்டு உள்ளன.

இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அங்கும், இங்கும் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக யானைகள் ஆசனூர் வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி அலைந்தபடி செல்கின்றன.

சேற்றில் சிக்கிய யானை

இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் ஓடும் அரேப்பாளையம் ஓடையில் தண்ணீர் குறைவாக உள்ளதுடன், ஆங்காங்கே குட்டை போன்று தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அந்த ஓடையில் தண்ணீர் குடிக்க நேற்று முன்தினம் மாலை 7 யானைகள் வந்தன. தண்ணீர் குடித்துவிட்டு 5 யானைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. அதில் 2 ஆண் யானைகள் மட்டும் ஓடையின் நடுப்பகுதியில் நின்றவாறு தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. அப்போது ஒரு யானையின் கால் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கி கொண்டது. இதனால் சேற்றில் இருந்து காலை எடுத்து வைத்து ஒரு அடிக்கூட நகர முடியாமல் அந்த யானை தவித்தது.

ஒரு மணி நேர போராட்டம்

அந்த யானையின் பின்னால் நின்ற மற்றொரு யானை துதிக்கையால் சேற்றில் சிக்கிய யானையை தள்ளி வெளியேற உதவியது. எனினும் அந்த யானையின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. இதனால் பாிதவித்த யானை சத்தம் போட்டு பிளிறியது.

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு சேற்றில் சிக்கிய யானை விடுபட்டு மெல்ல நகர தொடங்கியது. மீண்டும், மீண்டும் பின்னால் நின்ற யானை தனது தந்ததால் சேற்றிய சிக்கிய யானையை குத்தி தள்ளியபடியே இருந்தது. தொடர்ந்து சேற்றில் சிக்கிய யானை முழுவதும் விடுபட்டு குட்டையில் இருந்து வெளியேறியது. பின்னர் 2 யானைகளும் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

வீடியோ வைரல்

சேற்றில் சிக்கிய யானையையும், அதற்கு உதவியாக செயல்பட்டு குட்டையில் இருந்த மீட்ட மற்றொரு யானையின் செயல்களும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்