ஆண்டிப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-22 16:02 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 29). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், முத்துலட்சுமி சாவில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முத்துலட்சுமி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்