ஆண்டிப்பட்டி அருகேகருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிப்பு:விவசாயிகள் கவலை

ஆண்டிப்பட்டி அருகே கருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-16 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, எம்.சுப்புலாபுரம், கண்டமனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வைகை ஆற்றுக் கரையோரத்தில் வண்டல் மற்றும் செம்மண் கலந்த நிலங்களில் விளையும் பருத்தி தரம் மிகுந்ததாக இருக்கும். இதனால் இங்கு விளையும் பருத்திக்கு சந்தையில் கடும் கிராக்கி மற்றும் விலையும் அதிகமாக இருக்கும்.

இப்பகுதியில் விளையும் பருத்தி ஆண்டிப்பட்டி மற்றும் தேனியில் உள்ள வாரச்சந்தையில் ஏலம் விடப்பட்டு கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும மும்பை, சூரத் போன்ற பெருநகரங்களில் நூற்பாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆண்டிப்பட்டி பகுதியில் பயிரிட்டுள்ள பருத்தி செடிகளில் கருகல்நோய் மற்றும் வெம்பல்நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பூ மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் நோய் பாதிப்பால் விளைச்சல் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

மேலும் நோய் தாக்குதலால் விளைந்த பருத்தியும் தரம் குறைந்து இருந்ததால் சந்தைகளில் விலையும் 40 சதவீத அளவிற்கு குறைவாகவே போனது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.100 முதல் ரூ.120 வரை விலை போன நிலையில், தற்போது விளைந்த தரம் குறைந்த பருத்தி ரூ.45 முதல் ரூ.60 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தற்போது கிடைக்கும் விலை பராமரிப்பு செலவுக்கு கூட போதாது என்பதால் விவசாயிகள் பலர் பஞ்சை எடுக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். எனவே பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்