அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூரை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் பிரம்மதேசம் பாலம் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த 20-ந் தேதி அதிகாலை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடி சென்று விட்டார். இதுகுறித்து கேசவன் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணிகளை திருடி சென்றவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்தியூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கவுந்தப்பாடியை சேர்ந்த தமிழ்செல்வன் (21) என்பதும், அவர்தான் கேசவனின் கடையின் பூட்டை உடைத்து துணிகளை திருடியது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர்.