அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

பெண்கள் சாலை மறியல்

Update: 2022-07-25 15:34 GMT

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அருகே உள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை 8 மணி அளவில் காலிக்குடங்களுடன் சித்தார்-பூனாச்சி ரோட்டில் ஒன்று திரண்டனர்.

பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து உடனே அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் குடிப்பதற்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகிறோம். சுமார் ½ கி.மீ. தூரம் சென்று கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரையும் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம். உடனே கரலாமணி பகுதியில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.' என்றனர்.

அதற்கு அதிகாரிகள், 'விரைவில் உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சித்தார்-பூனாச்சி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்