அம்மாபேட்டை அருகே மர்ம விலங்குகள் கடித்து 16 ஆடுகள் பலி

அம்மாபேட்டை அருகே மர்ம விலங்குகள் கடித்து 16 ஆடுகள் இறந்தன.

Update: 2022-11-17 21:09 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே மர்ம விலங்குகள் கடித்து 16 ஆடுகள் இறந்தன.

விவசாயி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் அந்த பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார்.

அலறல் சத்தம்

நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். பின்னர் மாலையில் வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியின் வெளிப்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென ஆடுகள் சத்தம் போட்டு அலறின. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சக்திவேல் திடுக்கிட்டு எழுந்தார். இதனால் அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டின் கதவை திறந்து கொண்டு ஆட்டுப்பட்டிக்கு வந்தார்.

16 ஆடுகள் கடித்து குதறப்பட்ட...

அப்போது அங்கு 16 ஆடுகள் கழுத்து, முதுகு மற்றும் வயிற்று பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு மர்ம விலங்குகளால் ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அச்சம்

தகவல் அறிந்ததும் சென்னம்பட்டி வனவர் பாலசுப்ரமணியம், குருவரெட்டியூர் கால்நடை டாக்டர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த மர்ம விலங்குகளின் கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி சக்திவேல் குடியிருக்கும் பகுதி பாலமலை வனப்பகுதியையொட்டி உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் ஆடுகளை கடித்து உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்து உள்ள சம்பவம் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு மேய்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்