ஆழ்வார்திருநகரி அருகேதாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார்திருநகரி அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-04-13 18:45 GMT

தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார்திருநகரி அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, உதவி கலெக்டர்கள் கவுரவ்குமார், புகாரி, மகாலட்சுமி, தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இழப்பீடு

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், 2022- 2023-ம் ஆண்டில் ராபி பருவத்தில் மழை குறைவாக பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் மகசூல் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, மகசூல் கணக்கெடுப்பில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும். திருச்செந்தூர்- அம்பை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் குறித்து புலஎண் வாரியாக முறையாக மர பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அந்த மரங்களுக்கு சரியான முறையில் தண்ணீர் வசதி செய்து அவைகளை பராமரிக்க வேண்டும்.

உயர்மின் கோபுரங்கள் விவகாரம்

உடன்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனை தரிசு நிலங்களில் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளது?, அதனை மேம்படுத்த செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா? என அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். தரிசு நிலங்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி அறிவிப்பது இல்லை. பல தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை வாங்கி வைத்துக் கொண்டு, அந்த நிலங்களுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையோடு பயிர் காப்பீட்டு தொகை பெறுகின்றனர். இதனால் குறைந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறைவான இழப்பீட்டு தொகையே கிடைக்கிறது. எனவே, தரிசு நிலங்களை முறையாக கணக்கீடு செய்து அறிவிக்க வேண்டும்.

தடுப்பணை

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மோசடி புகாரில் சிக்கி முடக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் முதலீடு செய்த பணம், நகை போன்றவை திரும்ப கிடைக்கவில்லை. விரைவாக விவசாயிகளின் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்வார்திருநகரி அருகே தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். அந்த தடுப்பணையில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

கலெக்டர் செந்தில்ராஜ்

விவசாயிகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, விவசாயிகளின் பயன்பாட்டுக்காக GRAINS என்ற புதிய இணையதளத்தை உருவாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள குளங்களில் விவசாயிகள் கரம்பை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த குளங்களில் கரம்பை மண் எடுக்கலாம் என்ற பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்துக் கொள்ளலாம். கரம்பை மண் எடுக்கும் பணியை மே 31-க்குள் முடிக்க வேண்டும்.

ராபி பருவத்தில் மழை குறைவாக பெய்து இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடன்குடி அனல்மின்நிலையத்தில் இருந்து உயர்மின் பாதை என்பது நீண்ட தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. அதில் ஒரு உயர்மின் கோபுரத்தை மாற்றி அமைத்தால் மின்சாரம் கடத்தப்படுவதில் பாதிப்பு ஏற்படும் என அந்ததுறை வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, வருங்காலங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குரும்பூர் கூட்டுறவு சங்க...

வரும் மே மாதம் ஜமாபந்தி நடைபெறுவதற்கு முன்பாகவும், அடுத்த விவசாயிகள் கூட்டத்துக்கு முன்பாகவும் வருவாய், வேளாண்மை, புள்ளியியல் உள்ளிட்ட துறைகள் இணைந்து தரிசு நிலங்கள் குறித்து கணக்கெடுத்து முறையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் தரிசு நில மேம்பாட்டு திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். செட்டிக்குறிச்சியில் சூறாவளி காற்று காரணமாக 94 விவசாயிகளின் 13 ஆயிரத்து 300 வாழைகள் சேதம் அடைந்து உள்ளன. உரிய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை திரும்ப கொடுக்க ரூ.17 கோடி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் விரைவில் விடுவிக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் திரளான விவசாயிகள், அரசு அலுவலர்கள கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்