அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-01-09 18:45 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 4-வது கூட்டு தொழில் நுட்ப கம்பெனி என்.சி.சி. சார்பில் ஒருங்கிணைந்த வருடாந்திர தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கடலூர், விழுப்புரம், அரியலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 314 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். முகாமில் மாணவர்களுக்கு ராணுவ பாடத்திட்ட பாடங்கள் நடத்தப்பட்டு செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவசர கால விழிப்புணர்வு, தலைமை பண்பு, சுகாதாரம், யோகா, தற்காப்பு விளையாட்டு, தனித்திறன் போன்ற தனிமனித விழிப்புணர்வும், போதைப்பொருள் ஒழிப்பு, தொற்று நோய்கள் தடுப்பு போன்ற சமுதாய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.முகாமில் ஒரு பகுதியாக நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மைதானத்தில் மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமிற்கு அண்ணாமலை நகர் 4-வது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி தேசிய மாணவர் படை அதிகாரி வாசுதேவன் நாராயணன் தலைமை தாங்கி, பயிற்சியை கண்காணித்து வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், பள்ளி கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. அதிகாரிகள் கேப்டன் சீமான், லெப்டினன்ட் ரமேஷ், முதல் நிலை அதிகாரி ராஜசேகர், இரண்டாம் நிலை அதிகாரி அனிதா, ஜோசப் ஸ்டாலின்ராஜ், கார்த்திக் ஆகியோர் செய்து வருவதுடன், மாணவர்களை வழிநடத்தி பயிற்சி அளித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்