உடுமலையில் நலம் தரும் நாவல் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
நாவல் பழங்கள்
இயற்கை அன்னையின் படைப்பில் பல்வேறு அற்புதங்கள் அறுசுவைகள் நிறைந்த பழங்களும் அடங்கும். ஒவ்வொன்றும் அதற்கு உண்டான குணத்துடன் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல்களை அளித்து வருகிறது.
பழங்களை உட்கொள்வதால் கண்ணுக்கு தெரியாத பலவித நோய்கள் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தப்படுகிறது. இதனால் உடலும் ஆரோக்கியமாக புத்துணர்வோடு திகழ்கிறது.அந்த வகையில் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகள் நிறைந்த நெகாப்பழம் என்று அழைக்கக் கூடிய நாவல் பழங்கள் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.
மருத்துவ குணங்கள் கொண்டது
இந்த மரத்தின் பட்டை, இலை, பழம் என அனைத்தும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னகத்தை பெற்று உள்ளது.30 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய நாவல் பழங்கள் உடுமலை பகுதியில் தள்ளுவண்டி மற்றும் சில்லரை வியாபாரிகள் மூலமாக கிலோ ரூ.400-க்கு மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உப்பு, மிளகு தூள் பிரட்டலுடன் சேர்ந்து அமிர்த சுவையை அளிக்கும் நாவல் பழத்தின் மருத்துவ குணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பழம் வாய் முதல் குடல் வரை ஏற்படக்கூடிய புண்களை குணமாக்குவதுடன் அஜீரண கோளாறை போக்கி பசியை தூண்டுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ரத்த சோகையை போக்கி புற்றுநோய் மற்றும் மூல நோய் ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை நோய்க்கு அருமருந்தான பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த பழங்களை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி உட்கொண்டு வருகின்றனர்.
சர்க்கரை நோய்க்கு எமன்
நாவல் பழத்தை பயன்படுத்திய பின்பு அதில் எஞ்சியுள்ள கொட்டையை வெயிலில் காய வைத்து அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் பால், வெந்நீர் அல்லது ஏதாவது நீராதாரத்துடன் கலந்து காலை மாலையில் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து விடும். அதேபோன்று நாவல் பழத்தை சாறு எடுத்து ஒரு மாத காலம் குடித்து வந்தால் அதிக அளவு சிறுநீர் போக்கு குறைந்து நீரிழிவு முற்றிலும் குணமாகிவிடும்.
இயற்கை படைத்த அற்புதங்கள் நிறைந்த நாவல் பழத்தை பயன்படுத்தி அனைவரும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வோமே.