சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-02-11 19:05 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாட்டியாஞ்சலி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழு தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்னாள் தலைவர் வக்கீல் ஏ.கே.நடராஜன், துணை தலைவர்கள் ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாட்டிய நிகழ்ச்சிகள்

இதுகுறித்து செயலாளர் வக்கீல் சம்பந்தம் நிருபர்களிடம் கூறுகையில், சிவராத்திரியான 18-ந் தேதி நாட்டியாஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு தொடங்க திட்டமிட்டுள்ளோம். விழாவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் தொடங்கி வைக்கிறார். விழாவில் நாட்டிய நாடகங்கள், மோகினி ஆட்டம், குறவஞ்சி, கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கின்றனர். தஞ்சை கிராமிய கலைஞர்களின் பொய்க்கால் குதிரை, மயில் நடனம் நடைபெறுகிறது. நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்