சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா: 'நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்'கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

‘நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்’ என்று சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பேசினார்.

Update: 2023-02-22 18:45 GMT

சிதம்பரம், 

மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு வந்தார். இவரை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சப் - கலெக்டர் ஸ்வேதா சுமன் ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஆன்மிக தலைநகரம்

உங்கள் அனைவருக்கும் தெரியும் தில்லை நடராஜர், ஆதிகடவுளும், முதன்மையான கடவுளும் ஆவார். நமது திருநாட்டின் சனாதன தர்மம் தோன்றி, பல வித உணர்வுகளை தோற்றுவித்துள்ளது. பஞ்ச பூதங்களும், தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகம் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. புவிஈர்ப்பு விசையின் மைய தலமாக சிதம்பரமும், அதில் உள்ள தமிழ்நாடும் விளங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளும், முனிவர்களும், மக்கள் எவ்வாறு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். பன்முக தன்மையை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இலைகள்

ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள், கனிகள் இருக்கும். ஆனால் இரண்டு இலைகளோ, இரண்டு கனிகளோ ஒரே மாதிரி அமைவதில்லை. அதேபோன்று தான் பொதுமக்களாகிய நாமும் பல்வேறு உணர்வுகளும், கட்டமைப்பு இருந்தாலும் ஒரே தேசத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை முன்னோர்கள் நமக்கு ஊட்டி சென்றுள்ளனர்.

முதன்மை நாடாக விளங்கும்

இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார மந்த நிலை நிலவும் போது, இந்தியா மட்டும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் இன்று, இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் ஒரு சேர பார்க்கும் பிரதமரை பெற்றுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நமது பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்ற நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன.

நாம் தற்போது உலகில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறோம். 2047-ம் ஆண்டில், உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை நாடாக இந்தியா விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. இன்றைய நிலையில் நமது இளைய சமுதாயம் செயற்கை கோள்களை அனுப்பி உள்ளது. நமது நாடு பிற நாடுகளை போல் உலகை நமது குடும்பமாக கருதியதால் இது சாத்தியமானது.

அடிமையாக இருக்கிறோம்

நம் நாடு இன்று உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. நாம் ஆங்கிலத்திற்கு பல காலமாக அடிமையாக இருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். நமது சங்க இலக்கியங்களான திருக்குறள், திருமுறை, திவ்ய பிரபந்தம் ஞானத்தை கொண்டது. நமது குழந்தைகளை அதை படிக்க வேண்டும்.

நாட்டியம் என்பது இறைவனை அடைய, இறைவனை தொடர்பு கொள்ள கூடிய ஒரு ஊடகமாக விளங்குகிறது. நாட்டியாஞ்சலி குழுவினர் ஆண்டுதோறும் நடராஜருக்கு நாட்டியத்தால் அஞ்சலி செய்வதால் மிக உன்னத நிலையை அடைகிறார்கள். மிகப்பெரிய சேவையை செய்து வருகிறார்கள். இது பாராட்டத்தக்கதாகும். எவ்வாறு ஒரு மரத்தின் இலைகள், காய்கள் ஒன்று சேர்ந்து செயல்படுகிறதோ, அதேபோன்று நாம் அனைவரும் பன்முக தன்மையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, நாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்