தென்னந்தோப்புகளை தேடி வந்து இயற்கை உரம் பரிந்துரைக்கும் ஆசாமிகள்
தென்னந்தோப்புகளை தேடி வந்து இயற்கை உரம் பரிந்துரைக்கும் ஆசாமிகள்
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தென்னந்தோப்புகளைத் தேடி வந்து இயற்கை உரம் பரிந்துரைக்கும் ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேளாண்மைத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இயற்கை விவசாயம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.தென்னை சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்குதல், கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
இந்த நிலையில் சமீப காலங்களாக இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளின் ஆர்வம் திரும்பியுள்ளது.இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சில ஆசாமிகள் விவசாயிகளை நேரடியாக தோட்டங்களிலேயே சென்று சந்திக்கின்றனர்.
தங்களிடமுள்ள இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
அதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களைத் தவிர்த்திடுங்கள். அதுபோன்ற நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
நுண்ணூட்டம்
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத் தரும். தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல் நுண்ணூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும். இதனை 2 ஆகப் பிரித்து ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி, பிப்ரவரியில் இட வேண்டும்.
பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை நுண்ணூட்டம் அரை கிலோ வீதம் ஆண்டுக்கு 2 முறை இட வேண்டும்.மேலும் தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 1 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு 1 லிட்டர் வீதம் மக்கிய தொழு உரத்துடன் கலந்து, மரத்தின் தூர் பாகத்திலிருந்து 3 அடி தூரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். இவ்வாறு சரியான விகிதத்தில் உரம் கொடுப்பதன் மூலம் பொக்கைக் காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும். தரமான தென்னை நுண்ணூட்டதை வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் பெற்று பயனடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.