ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் தொடக்கம்
ரோஜா கண்காட்சிக்காக கவாத்து பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
ஊட்டி
ரோஜா கண்காட்சிக்காக கவாத்து பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
கோடை சீசன்
ஆண்டு தோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசனில் ஊட்டிக்கு சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் தோட்டக்கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
கோடையில் நடக்கும் இந்த கண்காட்சிகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
ரோஜா கண்காட்சி
எனவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணிகள் நடந்து வரும் நிலையில், அவைகளை பராமரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
ரோஜா பூங்காவில், செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது உரமிடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் இயற்கை உரமிடும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
உரமிடும் பணிகள் முடிந்தவுடன் கவாத்து செய்யப்பட்ட செடிகளை பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. கோடை சீசனுக்கு ஒன்றரை மாதமே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.