கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,579 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 17:01 GMT


தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் நீதிமன்றத்தில் இன்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹர் தலைமை தாங்கினார். தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுபாஅன்புமணி, எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பஷீர் வரவேற்றார்.

இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ரூ.40 கோடி வசூல்

இதில் கூடுதல் சார்பு நீதிபதி-2 மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) அனுஷா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கமலநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 ரகோத்தமன், கடலூர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 7,237 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 3,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.40 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரத்து 875 வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்