தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊட்டி,
தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ரத்த சோகை இல்லாத நீலகிரியை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது. பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து காபி ஹவுஸ் பகுதி வரை பேரணி சென்றது. இதில், கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்துகொண்டனர். மேலும் சிவப்பு நிற ஆடை அணிந்து சென்றனர்.
தொடர்ந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது குறித்த ஊட்டச்சத்து பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.இதில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி தேவக்குமாரி, ஆர்.டி.ஓ.துரைசாமி, சுகாதார துறை இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சாம்சாந்த குமார், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், தாசில்தார் ராஜசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.