தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி:இந்திய கப்பல் படை அணி முதலிடம்

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி முதலிடம் பிடித்தது.

Update: 2023-05-22 18:45 GMT

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 15-ந்தேதி பெரியகுளத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கவுஹாத்தி ஓ.என்.ஜி.சி. அணி, புனே கஸ்டம்ஸ் அணி, கொச்சி மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் கஸ்டம்ஸ் அணி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, சென்னை விளையாட்டு விடுதி அணி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் துறை அணி, புதுடெல்லி இந்திய ரெயில்வே அணி, திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி, புதுடெல்லி சி.ஆர்.பி.எப். அணி உள்ளிட்ட 21 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.

நேற்று நடந்த இறுதி லீக் சுற்று போட்டியில் லோனாவாலா இந்திய கப்பல் படை அணியும், புனே கஸ்டம்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய கப்பல் படை அணி 92-86 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 3-ம் இடத்திற்கான போட்டியில் புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் விளையாடின. இந்த போட்டியில் 74-62 என்ற புள்ளி கணக்கில் இந்திய விமானப்படை அணி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் இடத்தைப் பிடித்த இந்திய கப்பல் படை அணிக்கு சுழற்கோப்பை, ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த புனே கஸ்டம்ஸ் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் தொடர்ச்சியாக அதிக புள்ளிகளை அணிக்காக சேர்த்த இந்திய கப்பல் படை அணி வீரரான மந்திப் சிங்கிற்கு மோட்டார்சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்