242 தபால் நிலையங்கள் மூலம் 17 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை
நாகை தபால் கோட்டத்தில் உள்ள 242 தபால் நிலையங்கள் மூலம் 17 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயராகவன் கூறினார்.
நாகை தபால் கோட்டத்தில் உள்ள 242 தபால் நிலையங்கள் மூலம் 17 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயராகவன் கூறினார்.
சுதந்திர தின விழா
75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வீடுகளில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடிகளை ஏற்றி கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தேசிய கொடிகள் ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சி ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
17 ஆயிரம் தேசிய கொடிகள்
பொதுமக்களிடையே தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாட வசதியாக நாகை தலைமை தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாகை தபால் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயராகவன் கூறியதாவது:-
நாகை தலைமை தபால் நிலையத்தில் மட்டும் இதுவரை 1,885 தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. நாகை தபால் கோட்டத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இங்குள்ள 242 தபால் நிலையங்களில் 17 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு தேசிய கொடியின் விலை ரூ.25 ஆகும். விற்பனை தொடங்கியது முதல் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.