கல்வித்துறையில் தேவைப்படும் மாற்றத்தை தேசிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும்-புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம்

கல்வித்துறையில் தேவைப்படும் மாற்றத்தை தேசிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும் என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2022-05-29 15:18 GMT

திருவாரூர்:-

கல்வித்துறையில் தேவைப்படும் மாற்றத்தை தேசிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும் என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

கருத்தரங்கம்

தேசிய கல்வி கொள்கையை விரைவாகவும், எளிதாகவும் அமலாக்கம் செய்வது தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கொள்கையில் மாற்றங்கள் செய்வது என்பது சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும். ஒவ்வொரு கொள்கை முடிவுகளையும் உருவாக்கும் போதும், நடைமுறைப்படுத்தும் போதும் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறோம். எனவே அரசு சமூகத்தின் நலன் கருதி இவ்வாறான சவால்களை கடந்து செல்வதற்கான உரிய வழிகளை வகுக்க வேண்டும்.

கல்வித்துறையில் மாற்றம்

கல்வி என்பது அறிவை வளப்படுத்துவதுடன், தனி மனித பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. மதிப்பெண்களுக்காக மட்டும் படிப்பதை விட நடைமுறை மற்றும் அனுபவம் சார்ந்த கல்வியே அதிக பயன் தரும். இன்றைய போட்டி நிறைந்த உலகில் புதிய சவால்களை இளைஞர்கள் சந்திக்கின்றனர். அதற்கேற்ற முறையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவை.

அதன்படி கல்வித்துறையில் தேவைப்படும் மாற்றத்தை தேசிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும். தாய்மொழி வழி கல்வியே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய கல்வி கொள்கை அதற்கேற்ற முறையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா சேகர், கருத்தரங்க அமைப்பாளர்கள் நாகராஜன், வேல்முருகன், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வி நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்