நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவருக்கு பாராட்டு
சாதனை படைத்த கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாலாட்டின்புத்தூர்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான செல்போன் செயலி வடிவமைப்பு போட்டியை 2012-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து போட்டியை நடத்துகிறது. இதில் 87 நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக இந்திய அளவில் நடைபெற்ற செல்போன் செயலி வடிவமைப்பு போட்டியில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை மாணவர் எம்.குருபிரசாத் 'டீம் சிங்குளாரிட்டி' எனும் குழுவில் இடம் பெற்று, ஆக்குமென்டேட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கணினி தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்து சமர்பித்திருந்த செயலி, அகில இந்திய அளவில் முதல் பரிசினை வென்று, அடுத்த கட்டமாக சர்வதேச அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த மாணவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டினார். சாதனை படைத்த மாணவரை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.