நாகர்கோவிலில் பெண் போலீசை தாக்கிய போதை ஆசாமி கைது

நாகர்கோவிலில் பெண் போலீசை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-25 19:54 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பெண் போலீசை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

பெண் போலீஸ் ஏட்டு

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள், முக்கிய சந்திப்புகள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் நகரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.கடைவீதிகளில் போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலும் வடசேரி பஸ் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அண்ணா பஸ் நிலையத்தில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

போதை ஆசாமி கைது

அப்போது ஒருவர் குடிபோதையில் அந்த பகுதியில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். உடனே பெண் போலீஸ் ஏட்டு அங்கு சென்று அந்த நபரை எச்சரித்தார். குடிபோதையில் இருந்த அந்த நபர், பெண் போலீசின் கையைப் பிடித்து முறுக்கி, ரகளையில் ஈடுபட்டார். இதில் பெண் போலீசின் கையில் கிடந்த தங்க வளையல் உடைந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அந்த நபரை பிடித்து கோட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் தென்காசி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (வயது 50) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெண் போலீஸ் ஏட்டு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் ஜான்சன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான்சன் மீது தென்காசி போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்