ெதாழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுத்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை தூர்வார வேண்டும்- பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

ெதாழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுத்து நஞ்ைச ஊத்துக்குளி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-09-11 21:52 GMT

ெதாழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுத்து நஞ்ைச ஊத்துக்குளி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஈரோடு கால்நடை மருத்துவனை ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் சென்ட்ரல் தியேட்டர் அருகில் ஏராளமான ஜவுளி மற்றும் இதர வியாபார நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில், கால்நடை மருத்துவமனை ரோட்டின் இருபுறமும் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை, ரோட்டின் இருபுறமும் உள்ள ஜவுளி மற்றும் இதர வியாபார நிறுவனத்தினர் ஆக்கிரமித்து தங்களது கடை மற்றும் வியாபார நிறுவனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கால்நடை மருத்துவமனை, வங்கிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மிகவும் பரபரப்பான இந்த ரோட்டில் ஆக்கிரமிப்பு காரணமாக தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கு கூட கடும் தாமதம் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கல்குவாரி

தமிழ்புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடி நெசவாளர் குடியிருப்பு பகுதியில், தனியாருக்கு சொந்தமான கறிக்கோழி பண்ணை செயல்படுகிறது. அங்கு கோழி கழிவு, இறந்த கோழிகளை அகற்றுதல், தீவன கழிவு போன்றவற்றை சுகாதாரமாக பராமரிக்காத நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களால் குடியிருப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள பண்ணையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு -பழைய பூந்துறை ரோட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலை நடைபாதையில் கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். அந்த இடத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. பெருந்துறை வாய்பாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து கனரக வாகனங்களில் கனிமங்களை கொண்டு செல்வதால் அந்த பகுதியில் உள்ள ரோடுகள் மோசமடைவதுடன், காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

நஞ்சை ஊத்துக்குளி

ஈரோடு சாஸ்திரி நகர், பகவதி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'வாய்க்கால்மேடு பகுதியில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் செல்கிறது. சூரம்பட்டி அணைக்கட்டு முதல், நஞ்சை ஊத்துக்குளி வரை 1,600 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன.

இந்த வாய்க்கால் சில ஆண்டுக்கு முன்பு தூர்வாரப்பட்டதால் தண்ணீர் நன்றாக சென்றது. தற்போது இந்த வாய்க்காலில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் கலக்கிறது. குப்பைகளை மொத்தமாக கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் தொழிற்சாலை கழிவுகளையும் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.

விவசாயத்துக்கு இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், விளை நிலங்களும், பயிரும் பாதிக்கிறது. நிலத்தடி நீரில் கழிவு நீரும் கலந்து இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்துவோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வாய்க்காலை துார்வாருவதுடன், வாய்க்காலில் குப்பை, தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

217 மனுக்கள்

இதேபோல் நேற்று மொத்தம் 217 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 500 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்