மேட்டூர்
மேட்டூர் அணை நீர்மட்டம் 57.94 அடியாக குறைந்த நிலையில், அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிகிறது.
மேட்டூர் அணை
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, அங்கு வசித்த பொதுமக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரங்கள் என புராதன சின்னங்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து இடம் பெயர்ந்தனர். அந்த சிலை மற்றும் கோபுரம் மேட்டூர் அணையில் மூழ்கி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 74 அடிக்கு கீழ் வரும் போது கிறிஸ்தவ கோபுரமும், 69 அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும் வெளியே தெரிய தொடங்கும்.
மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், கர்நாடக மாநில அரசும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை உரிய அளவில் திறந்து விடவில்லை.
நந்தி சிலை தெரிகிறது
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களாக கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதன்காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை ஆகியவை வெளியே ெதரிய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் நேற்று 57.97 அடியாக குறைந்து விட்டது. இதையடுத்து அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுமையாக தெரிகிறது.
மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து அங்கிருந்து பரிசல் சவாரி சென்று அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.