ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

Update: 2023-03-30 20:18 GMT

ஜீயபுரம்:

தீர்த்தவாரி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதைெயாட்டி நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் வழியாக ெசன்று நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நேற்று காலை நம்பெருமாளுக்கு தயிர் சாதம், மாவடு, கீரை ைவத்து அமுது படைத்தனர்.

இதைத்தொடர்ந்து நம்பெருமாள் அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் ஆஸ்தான மண்டபம் எதிரில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஜடாரி தீர்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மதியம் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

மீண்டும் கோவிலை வந்தடைந்தார்

இதில் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் பல்லக்கில் புறப்பாடாகி ஜீயபுரம் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்த நம்பெருமாள், கண்ணாடி அறையில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தயிர் சாதம், மாவடு

முன்னொரு காலத்தில் ரெங்கநாதர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பேரன் ரங்கன், முகத்திருத்தம் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டான். இதையடுத்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே கரை ஒதுங்கி உயிர் பிழைத்த ரங்கன், தன்னை காணாது பாட்டி அழுவாள் என்று ரெங்கநாதரிடம் முறையிட்டான். காவிரியில் வெள்ளம் கண்டு அழுது புலம்பிய பாட்டியை ஆறுதல்படுத்த, ஜீயபுரத்து காவிரி கரை அருகே குளித்து எழுந்த நிலையில் ரங்கன் உருவில் நம்பெருமாள் வந்தார்.இதனால் மகிழ்ந்த மூதாட்டி, பேரனை வீட்டிற்கு அழைத்து சென்று பழைய சோறும், மாவடுவும் அளித்தாள். அதனை ரெங்கநாத பெருமாள் சாப்பிட்ட வேளையில், அங்கு ரங்கன் வர, நம்பெருமாள் சிரித்தபடியே மறைந்தார். இதனை நினைவூட்டும் வகையில் நேற்று ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாளுக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் அமுது படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்