மதனகோபாலசுவாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் மூடப்பட்டது.

Update: 2023-01-11 18:30 GMT

பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2-ந்தேதி சொர்க்க வாசல் (பரமபதம்) திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இராப்பத்து நிகழ்ச்சி 10 நாட்கள் சிறப்பு ஆராதனையுடன் நடந்தது.

நிறைவு நாளான நேற்று இரவு நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே சன்னதி அக்ரஹாரம் வழியாக வந்து கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் சொர்க்கவாசல் வழியாக கோவிலை அடைந்தார்.

பல்லக்கில் இருந்து உற்சவ பெருமாள் இறங்கியதும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் குழுவினர் பெருமாள் முன்பு நம்மாழ்வாரின் பாசுரங்களை பாடி சேவித்து நம்மாழ்வாருக்கு அரங்கநாதர் மோட்சம் அருளிய நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது.

இனி அடுத்த வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று கோவில் நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்