கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெயர் நிராகரிப்பா? விளக்கம் பெற புதிய இணையதளம் அறிமுகம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பெயர் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டவர்கள், தாங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பெயர் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணையதளத்தினை உருவாக்கி உள்ளது இணையதள முழுமையான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடியும் எனத் தெரிகிறது.