கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-17 13:55 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், விசானம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக என் தந்தை விவசாயம் செய்தார். அவர் இறந்த பிறகு தென்னை, மா உள்ளிட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறேன். அந்த இடத்தில் ஒரு வீடும், ஒரு மாட்டு தொழுவமும் இருந்தது.

2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவராக நாச்சிமுத்து போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தேர்தலின்போது அவருக்கு எதிராக நான் செயல்பட்டதாக கருதி, என்னை பழிவாங்கும் விதமாக வருவாய் துறை அதிகாரிகள் மூலம் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வைத்தார்,

கடந்த ஜூலை மாதம் என் இடத்துக்கு வந்த பஞ்சாயத்து தலைவர், தாசில்தார் திருமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி எனக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அவர் விசாரிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு. தடை கேட்ட மனுவை கலெக்டர் 2 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், என்னிடம் வந்து ஒரு விசாரணையும் நடத்தாமல், கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் என் வீடு, மாட்டு தொழுவம் உள்ளிட்டவைகளை இடித்து தள்ளினர்.

இது கோர்ட்டு அவமதிப்பு செயல் என்பதால், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், தாசில்தார் திருமுருகன், வருவாய் ஆய்வாளர் சந்தோஷ் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர், 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.    

Tags:    

மேலும் செய்திகள்