நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-10-16 18:45 GMT

நாமக்கல் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் ஆகும். இதற்கு முக்கிய காரணம் இங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். அதே நேரத்தில் சாலை கட்டமைப்பு மிகவும் குறுகலானது. பஸ் நிலையமும் மிகவும் குறைவான இடத்திலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் நாமக்கல் நகருக்குள் வந்தே செல்கின்றன. இதுதவிர பள்ளி வாகனங்கள், லாரிகள் என நகருக்குள் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக விசேஷ நாட்களில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக இருக்கும்.

நடைபாதை மேம்பாலங்கள்

இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் போலீஸ் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து நேருபூங்கா மற்றும் பஸ்நிலையத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 இடங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த மேம்பாலங்களில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அமைக்கப்பட்ட பாலத்தை மட்டும் மாணவிகள் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 2 மேம்பாலங்களும் பயனற்று காணப்படுகின்றன. அது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.

இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்து வந்தது. அதன் அடிப்படையிலேயே நகராட்சி நிர்வாகம் முதலைப்பட்டியில் புறநகர் பஸ்நிலையம் அமைக்கும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்தியது. அந்த பணிக்கு டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்கிற நிலை உருவாகி உள்ளது.

இதேபோல் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரை சுற்றிலும் சுற்று வட்டபாதை அமைக்க வேண்டும் என்பது மற்றொரு பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக வைத்து வந்தாலும், இதுவரை அதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது நாமக்கல் நகரில் விசேஷ நாட்கள் மற்றும் காலை, மாலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என போக்குவரத்து ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ரிங்ரோடு அமைக்க வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறியதாவது:- புதிய புறநகர் பஸ்நிலையம் அமைந்தால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் எனும் கருத்து ஏற்புடையது அல்ல. சேலம், திருச்சி போன்ற வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்துமே நாமக்கல் நகருக்குள் வந்து செல்வதாலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முதன்மையான ஒரே தீர்வு நகரை சுற்றி ரிங்ரோடு அமைப்பது மட்டுமே.

ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்கிற பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அரசு ரிங்ரோடு அமைக்கும் பணியினை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும், அதனை இன்னும் முழுமையாக முடிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பெரும் பிரச்சினையாக கருதப்படும் இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு விரைந்து ரிங் ரோடு அமைக்கும் பணியினை முடிக்க வேண்டும். இதுவே இந்த நகர போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுக்கு வழிவகுக்கும்.

கனரக வாகனங்களுக்கு தடை

தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்கத்தின் தலைவர் பாலாஜி:-

தீபாவளி நெருங்கி வருவதால் கடைவீதி, சேலம் சாலை, பரமத்தி சாலை மற்றும் ரெங்கர் சன்னதி போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க நேதாஜி சிலையில் இருந்து மணிக்கூண்டு வரை பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்று பொருட்கள் வாங்கி வரும் வகையில் ஏற்பாடு செய்து, அப்பகுதியில் கனரக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

இதேபோல் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் உள்வரும் வழியை வெளியேறும் வழியாகவும், தற்போது பஸ்கள் வெளியே வரும் வழியை உள்வரும் வழியாகவும் மாற்றி அமைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதில் பல்வேறு போக்குவரத்து சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. இதை தனியொரு திட்டமாக செயல்படுத்தினால் போக்குவரத்து சிறப்படையும்.

தீர்வு கிடைக்கும்

லாரி உரிமையாளர் ஜி.ஆர்.சுப்பிரமணியன்:-

நாமக்கல்லுக்கு டிரான்ஸ்போர்ட் சிட்டி என்கிற பெயரும் உண்டு. அந்த அளவுக்கு இந்த நகரம் லாரிகளை அதிக அளவில் கொண்ட நகரம் ஆகும். பெரும்பாலான லாரி அலுவலகங்கள் நகரின் முக்கிய சாலைகளிலேயே அமைந்து உள்ளன. எனவே டிரைவர்கள் கணக்குகளை சமர்ப்பிக்க நகருக்குள் லாரியை கொண்டு வர வேண்டி உள்ளது. இதேபோல் பட்டறைகள் அனைத்தும் நகர எல்லைக்கு உள்ளேயே அமைந்து உள்ளன. லாரிகளில் பழுது ஏற்பட்டால் அதை நீக்கவும், லாரிகள் நருக்குள் வர வேண்டி உள்ளது. சரக்குகளை ஏற்றி, இறக்கவும் நகருக்குள் வந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது.

எனவே புறநகர் பஸ்நிலையம் அமைப்பது, ரிங்ரோடு அமைப்பது போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்தினால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்