வடமாநிலத்தவர்களின் வருகையை முறைப்படுத்த உள்நுழைவு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். அவர்கள் இருப்பிடம், வேலை செய்யும் இடம், ஊருக்கு திரும்பி செல்வதை கண்காணிக்க வேண்டும். வடமாநிலத்தவருக்கு ரேஷன் அட்டை, வாக்குரிமை கொடுக்கக்கூடாது. மத்திய அரசுப்பணியில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் குற்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மண்டல செயலாளர் த.வான்மதி வேலுசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர், வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், தெற்கு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட பொருளாளர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன், மாநில நிர்வாகிகள் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம் தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.