நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய வருமானம் ரூ.70.26 கோடி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய வருமானம் ரூ.70.26 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

Update: 2023-04-29 19:15 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய வருமானம் ரூ.70.26 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

அதிக வருமானம்

நாட்டின் முக்கிய நகரங்களை 4 வழிச்சாலைகள் இணைத்தாலும் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் நவீன காலத்துக்கு ஏற்றார் போல ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனாலேயே திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில், தமிழக ரெயில் நிலையங்கள் மூலம் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கி அதிக வருமானம் பெற்றுக் கொடுக்கும் பட்டியலில் நாகர்கோவில் ரெயில் நிலையம் 7-வது இடத்தை பெற்றுள்ளது.

22-வது இடம்

இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் வருமானத்தின் அடிப்படையில் முதல் 50 இடங்களை பிடித்த ரெயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தை சென்னை எம்.ஜி.ஆர். ரெயில் நிலையமும், 2-வது இடத்தை சென்னை எழும்பூர் ரெயில் நிலையமும், 3-வது இடத்தை கோவை சந்திப்பு ரெயில் நிலையமும் பிடித்துள்ளன.

அந்த வகையில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் 22-வது இடத்தை பிடித்துள்ளது. இதே போல கன்னியாகுமரி சந்திப்பு ரெயில் நிலையம் 46-வது இடத்தில் உள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய வருமானம் ரூ.70 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரத்து 605 ஆகும். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கூறினர். கன்னியாகுமரி சந்திப்பு ரெயில் நிலையத்தின் வருமானம் ரூ.22 கோடியே 78 லட்சத்து 95 ஆயிரத்து 538 ஆகும்.

உலக தரம் வாய்ந்த...

அதிக வருமானம் பெற்று தருவதால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் ரெயில்களை மாற்றி விடும் பிட்லைன்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கு எதிர்கால உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்