இலங்கைக்கு கடத்த 47 கேன்களில் பதுக்கிய நகபாலிஷ், வார்னிஷ் திரவங்கள்
இலங்கைக்கு கடத்த 47 கேன்களில் நிரப்பி வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகபாலிஷ், வார்னிஷ் திரவங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
மண்டபம்,
இலங்கைக்கு கடத்த 47 கேன்களில் நிரப்பி வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகபாலிஷ், வார்னிஷ் திரவங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
வீட்டில் பதுக்கல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வடக்கு தெரு பகுதியில் சில பொருட்கள், ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து, வேதாளை வடக்கு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மண்டபம் தனிப்பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கியூபிரிவு போலீசார் இணைந்து ஆள் இல்லாத அந்த குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வீட்டின் உள்ளே 47 பிளாஸ்டிக் கேன்களில் ரசாயன திரவங்கள் இருப்பது தெரியவந்தது. அனைத்து கேன்களையும் கைப்பற்றிய போலீசார், மண்டபம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
நகபாலிஷ் ரசாயனம்
அவற்றை திறந்து பார்த்தபோது, பெரும்பாலான கேன்களில் இருந்தது நகங்களை வண்ணமாக்குவதற்கான நக பாலிஷ் திரவம் என்பது தெரியவந்தது. ஒவ்வொரு கேனிலும் ஒவ்வொரு வண்ணம் என சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா உள்ளிட்ட பலவித வண்ணங்களில் நக பாலிஷ் திரவங்கள் இருந்தன. ஒவ்வொரு கேனிலும் ஒவ்வொரு எண் எழுதப்பட்டிருந்தது. வேறு சில கேன்களில் வார்னிஷ் திரவம் இருந்தது.
இந்த ரசயான திரவங்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடத்துவதற்காக பதுக்கிய பொருட்களில், நக பாலிஷ் பிடிபடுவது இதுவே முதல்முறை என போலீசார் தெரிவித்தனர். மேலும் நக பாலிஷ்களை கைகளில் தேய்க்க பயன்படும் சிறிய அளவிலான பிரஷ்கள் அடங்கிய ஒரு டப்பாவும் கைப்பற்றப்பட்டது. நகபாலிஷ், வார்னிஷ் என மொத்தம் சுமார் 500 லிட்டர் அளவில் பிடிபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த கேன்களை, சுங்கத்துறையினரிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர்.