நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் மூடப்பட்டது
நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் மூடப் பட்டது. இதனால் போலீசாருக்கும்- பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் மூடப் பட்டது. இதனால் போலீசாருக்கும்- பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துமாரியம்மன் கோவில்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழாவிற்காக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நடப்பாண்டு திருவிழா நடத்த முடியாததால், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம் என அக்கரைப்பேட்டை கிராம நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒரு தரப்பினர் தனியாக பாலாபிஷேகம் செய்வதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் அக்கரைப்பேட்டையில் கலவரம் ஏற்படும் நிலை உருவானது.
கோவில் மூடப்பட்டது
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அங்கு வந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இருதரப்பு மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தீர்வு எற்படவில்லை. இதனால் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலை மூட கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் கோவில் கதவு மூடப்பட்டது.நேற்று கோவில் முன்பு கலவர தடுப்பு வாகனத்துடன் (வஜ்ரா) நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில் நேற்று காலை பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள், கோவிலை திறந்து விடுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் சாமி வந்து ஆடியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மீண்டும் கோவில் திறக்கப்பட்டது
பின்னர் மீண்டும் இருதரப்பு மீனவ பஞ்சாயத்துகளிடம் நாகை உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முருகவேல், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 4 புதிய நிர்வாகிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு கணக்குகளை இன்று (திங்கட்கிழமை) பார்க்க இருதரப்பும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து சுமூக தீர்வு ஏற்பட்டது.
5 மணி நேரத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்து வழிபட்டனர்.