மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நாம் தமிழர் கட்சியினர் உதவி
வீட்டை புதுபித்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நாம் தமிழர் கட்சியினர் உதவி செய்தனர்
வநாகையை அடுத்த அகர செம்பியன் மகாதேவி பகுதியை சேர்ந்தவர் லலிதா. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த இவர் தற்போது இரண்டு கண்கள் தெரியாத நிலையில் தனது மகள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். மகளின் கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்த நிலையில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்தார். மேலும் அவர்கள் வசித்த வீடு மிகவும் சிதிலமடைந்ததால் மழை பெய்யும் போது பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். லலிதாவின் ஏழ்மை நிலை குறித்து தகவல் அறிந்த நாகை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவரது உத்தரவின்பேரில் மாநில சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் காசிராமன் தனது சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டினை புதுப்பித்து கட்டிக் கொடுத்தார். இந்தநிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பு என்கிற அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில், நாகை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழ்வேளூர் தொகுதி செயலாளர் பழனிவேல் முன்னிலையில், மாநில மகளிர் பாசறை செயலாளர் அஞ்சம்மாள் புதுப்பிக்கப்பட்ட வீட்டினை திறந்து வைத்தார். மேலும் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், கட்டில், பாய், தலையணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் மதியழகன், நாகை ஒன்றிய செயலாளர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.