சீமானிடம் பணம் பறிக்க முயற்சி நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்

சீமானிடம் பணம் பறிக்க நடிகை விஜயலட்சுமி முயற்சிக்கிறார் என்று சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-09-02 22:58 GMT

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பாசறையின் செயலாளர் கிருஷ்ண ராஜன், மாநில பொறுப்பாளர் ரத்னா, நாடாளுமன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து நடிகை விஜயலட்சுமி மீது ஒரு புகார் மனுவை அளித்தனர்.

சீமானுக்கு அவப்பெயர்

அதில், 'அரசியலில் சீமானுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது அரசியல் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் விஜயலட்சுமி, வீரலட்சுமி என்ற பெண்ணுடன் சேர்ந்து சீமான் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி பல்வேறு காலக்கட்டங்களில் பல நடிகர்கள் மீது புகார் கொடுத்த ஆதாரமும் இருக்கிறது. எனவே சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களிலும் புகார்

இதே புகார் மனுவை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா மற்றும் நிர்வாகிகள் கொடுத்தனர். இதுதவிர பல்வேறு மாவட்டங்களிலும் விஜயலட்சுமி மீது புகார் கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் புகார் தெரிவித்து உள்ளனர். மதுரவாயல் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நாகை மாவட்டத்திலும் விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்