நள்ளிரவில் வீடுபுகுந்து தாய், மகளை தாக்கி 8 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணாடம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து தாய், மகளை தாக்கி 8 பவுன் தாலி சங்கிலியை முகமூடி கும்பல் பறித்துச்சென்றது.

Update: 2022-07-04 17:23 GMT

பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 50). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(43). இந்த தம்பதியின் மகள் பவானி(24). இந்நிலையில் நேற்று இரவு கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சேகர் சென்று விட்டார்.

வீட்டில் பரமேஸ்வரி மற்றும் 9 மாத கைக்குழந்தையான பவின்மித்திரனுடன் பவானி தூக்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல், வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த பவானி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை அந்த கும்பல் பறித்தது. உடனே பவானி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துக்கொண்டு எழுந்த பரமேஸ்வரி, அங்கு கிடந்த அரிவாள்மனையால் முகமூடி கும்பலை தாக்க முயன்றார்.

முகமூடி கும்பல் தாக்குதல்

உடனே அந்த கும்பல் கத்தியால் பரமேஸ்வரியின் கையை வெட்டியதோடு, கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவானி தடுத்தார். அவரையும் அந்த கும்பல் செங்கல்லால் தாக்கியது. 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் முகமூடி கும்பல், வீட்டின் பின்பக்கமுள்ள கரும்பு வயல் வழியாக தப்பி ஓடியது. இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் வீடு புகுந்து தாய், மகளை தாக்கி தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்